ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 5 நாட்களில் E20 பெட்ரோலுக்கு தடை?
E20 பெட்ரோலுக்கு தடை விதிப்பதாக முன்னாள் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பதவியேற்ற 5 நாட்களுக்குள் E20 பெட்ரோலுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கோவாவில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், E20 பெட்ரோலுக்கு தடை விதிப்பது தனது அரசின் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
“5 நாட்களில் தடை விதிப்பேன்”
பதவியேற்ற 5 நாட்களுக்குள் E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பேன் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் தான் அரசியலை விட்டே விலகிவிடுவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார். அவரது இந்த பேச்சு கோவா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
E20 பெட்ரோல் விவகாரம்
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படும் E20 எரிபொருள் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவா தேர்தல் களத்தில் இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி முக்கிய பிரச்னையாக முன்னெடுக்கிறது.
அடுத்த ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
