தொடர்ந்து அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் வருகை; குற்றால அருவிகளில் உற்சாகமாக குளிக்கும் மக்கள்
தென்காசி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் சுற்றுலா சீசன் தற்போது களைகட்டியுள்ளது. பருவமழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் வந்துள்ள சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், குற்றாலத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் வியாபாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் முக்கிய அருவி பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பருவமழை தொடரும் நிலையில் வரும் நாட்களிலும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
