சீனாவில் பல் சிகிச்சை தொடர்பாக வெளியான ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 63 வயதான லி என்ற முதியவர், கடுமையான பல் வலி காரணமாக ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அவருக்கு தேவையில்லாமல் 12 பற்கள் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவலின்படி, “காலையில் பல் பொருத்திக் கொண்டு மதியம் கறி சாப்பிடலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி அவர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
சிகிச்சையின்போது, மருத்துவர் அவரது வாயில் இருந்த 12 பற்களையும் பிடுங்கியதாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சைக்காக அவரது வங்கி கணக்கில் இருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.6 லட்சம் வசூலிக்கப்பட்டதாகவும், அதன்பிறகும் ரூ.87,000 கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சைக்கு பிறகு, வாய் முழுவதும் ரத்தக்கசிவுடன், கையில் வெறும் ரூ.420 மட்டுமே இருந்த நிலையில் லி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலையை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, லியின் மகன் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், மருத்துவமனையின் சிகிச்சை நடைமுறை, வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் மருத்துவ ஒழுங்குமுறைகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், மருத்துவ விளம்பரங்களை கண்மூடித்தனமாக நம்பாமல், உரிய தகவல்களை சரிபார்த்து மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
