தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கரூர் மாவட்டத்தில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய தோல் அல்லாத (Non-Leather) காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் காணொலி (Video Conference) வாயிலாக தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் தகவலின்படி, இந்த புதிய தொழிற்சாலை ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு சுமார் 13,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கரூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறைக்கும் இந்த திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும், உற்பத்தித் துறையை வலுப்படுத்தவும் அரசு தொடர்ந்து பல்வேறு தொழில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், கரூரில் அமையும் இந்த புதிய Non-Leather Footwear தொழிற்சாலை முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
