Skip to content

“முதல்வரின் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும்” – கரூர் விவகாரத்தில் விஜய்க்கு துரைமுருகன் பதில்.

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசியலில் குற்றச்சாட்டுகளும் பதிலடி விமர்சனங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முதல்வர் விஜயின் கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “இதுவரை எந்த முதல்வரும் எதிர்க்கட்சிகளையும் அரவணைக்கும் வகையில்தான் பேசியதை கேட்டிருக்கிறேன். முதல்வரின் பேச்சில் எப்போதும் கண்ணியமும் பொறுப்பும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “பட்டாக்கத்தி விஷயங்களைப்போல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் பேசுவது முதல்வருக்கு ஏற்றதல்ல. பொதுப் பொறுப்பில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.

கரூர் சம்பவம் தொடர்பாக திமுக மீது முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை என்ன என்பதை சிபிஐ விசாரணை முடிவே வெளிக்கொண்டு வரும்” என்றார்.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாகும் வரை அரசியல் கருத்து மோதல்கள் தொடரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *