உலக பொருளாதார சூழ்நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள Lawrence Wong, வரும் காலங்களில் உலக நாடுகள் கடினமான பொருளாதார சவால்களை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு குறைவாக இருக்கும் என்றும், பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வணிக நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் கூடுதல் பொருளாதார அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், உலகளவில் தற்போது உருவாகி வரும் சூழ்நிலை 1970களில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைவிட மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் குறைந்தாலும், உலக பொருளாதாரம் உடனடியாக இயல்புநிலைக்கு திரும்பாது என்றும், நீண்டகால விளைவுகளை உலக நாடுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்கள் மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் கடினமான காலங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
