அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வியாழக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெய்ஜிங்கில் உள்ள “Great Hall of the People” மண்டபத்தில் ஷி ஜின்பிங், டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். டிரம்புக்கு காவலர் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் கை குலுக்கி சந்தித்தனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் உலக அரசியல் நிலைமை, வர்த்தக உறவுகள் மற்றும் அமெரிக்கா-சீனா உறவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய ஷி ஜின்பிங், “இந்த சந்திப்பை உலகமே கவனித்து வருகிறது” என்று கூறினார். உலகம் வேகமாக மாறி வரும் சூழலில் அமெரிக்கா-சீனா உறவு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளும் போட்டியாளர்களாக அல்ல, கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என்று ஷி ஜின்பிங் வலியுறுத்தினார். மேலும், “வர்த்தக போரில் யாரும் வெற்றி பெற முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும், இருநாட்டு பொருளாதார உறவுகள் பரஸ்பர நன்மை மற்றும் கூட்டு வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
டொனால்ட் டிரம்ப், ஷி ஜின்பிங்கை பாராட்டி “உங்களின் நண்பராக இருப்பது பெருமை” என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்கா-சீனா உறவு இனி இன்னும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் சிலரை தன்னுடன் சீனாவிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். இது இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு, உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் அமெரிக்கா-சீனா உறவில் முக்கியமான திருப்பமாக கருதப்படுகிறது.
