சென்னை,மார்ச்.25; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் வி.வி.ராஜன் செல்லப்பாவும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:
- எடப்பாடி (86) : எடப்பாடி மு. பழனிசாமி,
- வேப்பனஹள்ளி (54) : கே.பி. முனுசாமி,
- திண்டுக்கல் (132) : திண்டுக்கல் ஊ. சீனிவாசன்,
- நத்தம் (131) : நத்தம் இரா. விசுவநாதன்,
- தொண்டாமுத்தூர் (119) : எஸ்.பி.வேலுமணி,
- குமாரபாளையம் (97) : பி. தங்கமணி,
- ராயபுரம் (17) : டி.ஜெயக்குமார்,
- மைலம் (71) : சி.வி.சண்முகம்,
- மதுரை மேற்கு (194) : செல்லூர் ராஜூ,
- பாலக்கோடு (57) : கே.பி.அன்பழகன்,
- நன்னிலம் (169) : சு. காமராஜ்,
- வேதாரண்யம் (165) : ஓ.எஸ்.மணியன்,
- விராலிமலை (179) : டாக்டர் சி. விஜயபாஸ்கர்,
- கோவில்பட்டி (218) : கடம்பூர் ராஜூ,
- திருமங்கலம் (196) : ஆர்.பி.உதயகுமார்,
- சிவகாசி (205) : கே.டி.ராஜேந்திரபாலாஜி,
- மதுரவாயல் (7) : பா.பென்ஜமின்,
- கலசபாக்கம் (65) : அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி,
- திருப்பரங்குன்றம் (195) : வி.வி.ராஜன் செல்லப்பா,
- பவானி (104) : கே.சி.கருப்பணன்,
- ஜோலார்பேட்டை (49) : கே.சி.வீரமணி,
- கரூர் (135) : எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
- அரியலூர் (149) : தாமரை எஸ்.ராஜேந்திரன்.
23 பேரில் 16 பேர் தற்போதைய எம்எல்ஏக்கள்…
இந்த வேட்பாளர் பட்டியலின் படி 23 வேட்பாளர்களில் 16 பேர் தற்போதைய எம்எல்ஏ.க்கள், ஒருவர் எம்.பி. அது மட்டுமின்றி, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று பாஜக முனைப்புக் காட்டிய நிலையில் அதிமுக இத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராயபுரத்தில் ஜெயக்குமார் 8ஆவது முறையாக போட்டி
அதேபோல் மதுரை மேற்கு செல்லூர் ராஜூவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் 8-வது முறையாகப் போட்டியிடுகிறார்.
முன்னதாக நேற்று (மார்ச் 24), தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 24, செவ்வாய்) முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இன்று பரப்புரை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக-வுக்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
