Skip to content

ஆவடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? 2ஆவது முறை வெல்ல நாசருக்கு ஆசை! ஆனால், உட்கட்சிப்பூசலை சமாளிப்பாரா?

ஆவடி தொகுதி (எண் – 6)

தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி 2011ஆம் ஆண்டு தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்டது.

இத்தொகுதியில் இதுவரை 3 முறை நடைபெற்ற தேர்தல்களில், அதிமுக 2 முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதியில் பட்டியலினத்தவர் பெருமளவில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக வன்னியர்களும், சிறுபான்மை இனத்தவரும், குறிப்பாக இஸ்லாமியர் அடர்த்தியாக வாழ்கின்றனர். அவர்களே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றனர்.

இவர்கள் தவிர முதலியார், நாயுடு, ரெட்டியார், செட்டியார் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர்.

தொகுதியில் நல்லது, கெட்டது என அனைத்து நிகழ்வுகளிலும் சாதி, மத, கட்சி பாகுபாடின்றி கலந்துகொள்வது தற்போதைய திமுக அமைச்சரான நாசருக்கு பிளஸ் பாயிண்ட்கள்.
அதுமட்டுமின்றி ஆவடி அலுவலகத்திலும், காமராஜர் நகரிலுள்ள தனது வீட்டிலும் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கிறார்.

அதேவேளையில், நாசர் மாவட்டச் செயலாளராக இருக்கும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் நிலவும் உட்கட்சிப்பூசலும், தொகுதியில் ஆங்காங்கே தேங்கும் மழைநீரும் அவருக்கு பாதகமான அம்சங்கள்.

திமுகவில் நாசரே மீண்டும் சீட் கேட்கிறார். மாநில இளைஞரணி துணைச் செயலர் பிரபு கஜேந்திரனும் சீட் பெற மெனக்கெடுகிறார்.

அதிமுகவில், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், ஆவடி குமார், திருநின்றவூர் நகரச் செயலாளர் கிஷோர் ஆகியோர் சீட்டை எதிர்பார்க்கின்றனர்.

ஆவடி தொகுதிக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், இங்கிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வான மூவருமே தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்.

கடந்த தேர்தலில் நாசர் ஒன்றரை லட்சம் வாக்குகளையும், அதிமுகவின் மாஃபா பாண்டியராஜன் 95,000 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் விஜயலட்சுமி 30,000 வாக்குகளையும் பெற்றனர்.
புதிய கட்சியான தவெகவும் களத்திற்கு வருவதால், பிரதான கட்சிகள் வாக்குகளை இழக்கும் என கணிக்கப்படுகிறது.

ஆயினும், பட்டியலின மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள், தனிப்பட்ட செல்வாக்கு, கூட்டணி கட்சிகளின் பலம் ஆகிய காரணங்களால் ஆவடியில் திமுக முந்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *