Skip to content

உலகக் கோப்பை கால்பந்து; ஸ்காட்லாந்தை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்தது பிரேசில் அணி!

மியாமி,ஜூன்.25; உலகக் கோப்பை கால்பந்து தொடர் லீக் சுற்று ஆட்டமொன்றில் முன்னாள் சாம்பியனான பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை எளிதில் வீழ்த்தியது. இதன் மூலம் பிரேசில் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சி (Group C) பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அமெரிக்காவின் மியாமி நகரில் இன்று (ஜூன் 25, வியாழன்) அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்றது.

வினிசியஸ் ஜூனியரின் இரட்டை கோல் வேட்டை

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிரேசில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது.7ஆவது நிமிடம்: ஸ்காட்லாந்து அணியின் தடுப்பாட்ட வீரர் செய்த தவறால், பிரேசிலின் இளம் வீரர் ராயன் கொடுத்த பந்தை பெற்று வினிசியஸ் ஜூனியர் (Vinícius Júnior) முதல் கோலை அடித்தார்.

45-வது நிமிடம்: முதல் பாதியின் கூடுதல் நேரத்தில், வினிசியஸ் ஜூனியர் மீண்டும் ஒரு ஹெட்டர் (Header) மூலம் தனது இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். நடப்பு தொடரில் அவர் அடித்திருக்கும் 4ஆவது கோல் இதுவாகும்.

60-வது நிமிடம்: ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மத்தாயஸ் குன்ஹா (Matheus Cunha) பிரேசில் அணியின் மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

நெய்மாரின் மீள்வருகை- அதிர்ந்த மைதானம்

பிரேசில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நட்சத்திர வீரர் நெய்மார் (Neymar), காயத்தில் இருந்து மீண்டு ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்தார். இது அவர் பங்கேற்கும் 4ஆவது உலகக் கோப்பை தொடராகும். அவர் மைதானத்திற்குள் வந்தபோது மியாமி மைதானமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.

ஸ்காட்லாந்து அணிக்கான வாய்ப்பு என்ன?

மறுபுறம், இந்த தோல்வி ஸ்காட்லாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 1998-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள ஸ்காட்லாந்து, 3 புள்ளிகளுடன் தற்சமயம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளின் பட்டியலில் இடம் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா என்பதை அறிய அவர்கள் மற்ற பிரிவுகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கார்லோ அன்செலோட்டியின் பயிற்சியின் கீழ் விளையாடும் பிரேசில் அணி, ரியல் மேட்ரிட் கிளப் போன்றே மிக நேர்த்தியான ஆட்டத்தை உலகக் கோப்பையில் வெளிப்படுத்தி வருகிறது. வினிசியஸ் ஜூனியரின் அசாத்திய ஃபார்ம் மற்றும் நெய்மாரின் வருகை பிரேசில் அணியை இந்த உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் முதன்மை அணியாக மாற்றியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *