முதல்வர் அலுவலகம் தற்காலிகமாக மாற்றப்படுவது குறித்து விளக்கம்
எளிய முதல்வர்தான் விஜய் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் தற்காலிகமாக மாற்றப்படுவது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அவர், இது முதலமைச்சரின் தனிப்பட்ட வசதிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல எனக் கூறினார்.
முதல்வரை சுற்றி சுமார் 80 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதுமான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. அனைவரும் அமரும் வகையில் நல்ல, வசதியான இடம் தேவைப்படுவதால்தான் அலுவலகத்தை தற்காலிகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
“முதல்வர் வசதிக்காக அலுவலகம் மாறவில்லை”
முதலமைச்சர் அலுவலகம் முதல்வரின் தனிப்பட்ட வசதிக்காக மாற்றப்படவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெளிவுபடுத்தினார். அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
“வண்டியிலேயே சாப்பிட்டுவிட்டு செல்லும் முதல்வர்”
மேலும், பரப்புரைக்காக செல்லும்போது கூட வாகனத்திலேயே சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தங்கி பணிகளை மேற்கொண்டு செல்லும் எளிய முதல்வர்தான் விஜய் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.
முதல்வர் அலுவலகம் மாற்றம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
