Skip to content

ஜூன் 18-ல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை ; தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு!

சென்னை,ஜூன்.05; தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் அமைச்சரவைக் கூட்டம்

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 05, 2026) காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயம்

அப்போது அவர், “ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதை அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகளோடு இணைந்து கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். முதலமைச்சர் விஜய் இது குறித்து அறிவுறுத்தியதாக நிர்மல்குமார் தெரிவித்தார்.

அதில் இளைஞர்கள் மேம்பாடு, முன்னேற்றம், மகளிர் மேம்பாடு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வளர்ச்சி, லஞ்சம் இல்லாத நல்லாட்சி, போதை இல்லாத தமிழ்நாடு என அனைத்துத் துறைகளுக்கும் தொலைநோக்கு திட்டங்களை முதலமைச்சர் வகுத்து கொடுத்திருப்பதாகவும் நிர்மல்குமார் கூறினார்.

ஜூன் 18ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம், 2026-ஆம் ஆண்டு, ஜூன் 18-ம் நாள், வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அச்சமயம் தமிழ்நாடு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். 2026-27-ம் நிதியாண்டுக்கான புதிய அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு?

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், இது ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் சுமார் 4 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்த முழு விவரங்கள், ‘அலுவல் ஆய்வுக் குழு’ (Business Advisory Committee – BAC) கூட்டத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மேலும், இந்த கூட்டத்தொடரின் தொடர்ச்சியைத் தொடர்ந்து, சில வார இடைவெளிக்குப் பிறகு 2026-27 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் (Revised Budget) தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *