“அடிக்கடி மாறுபடும் சூழலை மாற்ற தமிழ்த்தாய் வாழ்த்தை சட்டமாக்க வேண்டும்” – கோவி.செழியன்
தமிழ்த்தாய் வாழ்த்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன், தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை உறுதி செய்யும் வகையில் இதனை சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என முதலில் அரசாணை வெளியிட்டவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என கோவி.செழியன் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் பாட வேண்டும் என 2021 டிசம்பர் 17ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டப் பாதுகாப்பு
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக அடிக்கடி மாறுபடும் சூழலை மாற்ற வேண்டும் என்றும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து உரிய முறையில் இடம்பெறுவதை உறுதி செய்ய இதனை சட்டமாக்க வேண்டும் என்றும் கோவி.செழியன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க சட்டரீதியான பாதுகாப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.
