சென்னை,மே.05; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
தனிப்பெரும்பான்மைக்கு 118 தேவை; ஆனால், கிடைத்திருப்பது 108..
ஆனாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி கிட்டவில்லை. அதாவது, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். ஆனால், தவெக 108 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது.
தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்து என்ன நடக்கும்?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி கண்டுள்ளார். இதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்.
அதே நேரத்தில், தவெகவில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால், மேலும் ஒரு இடம் குறைந்துவிடும்.
பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
அப்படிப் பார்க்கும் போது தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.
தற்போதைய சூழலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வீதம் 4 இடங்களும், தேமுதிகவிற்கு ஒரு இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு இரண்டு இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்திருக்கின்றன.
இன்று சென்னை வரும் ஆளுநர் அர்லேகர்
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 4 இடங்களும், பாஜக மற்றும் அமமுகவுக்கு தலா 1 இடமும் கிடைத்துள்ளன.
திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் உள்ள பிற கட்சிகள் ஆதரவு அளித்தால், தவெகவிற்கு கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும். அதன்படி கணக்கிட்டுப் பார்த்தால் 108+21 என்றளவில் 129 இடங்களைப் பெற முடியும். ஆனால், அவ்வளவு கட்சிகளின் ஆதரவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவையில்லை. 12 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதுமானது.
இந்த கணக்குகள் ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வரவிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு 2 வாய்ப்புகள்
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு 2 வாய்ப்புகளை அவர் வழங்க வாய்ப்புண்டு. ஒன்று, தவெக தலைவர் விஜய்யை அழைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறுவார். அல்லது, தனக்கு ஆதரவு தரும் கட்சிகளிடமிருந்து கடிதங்களைப் பெற்று, அதனை தன்னிடம் வழங்கும்படி கேட்டுக் கொள்வார். 119 இடங்களுக்கு மேல் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், தவெகவுக்கு ஆட்சியமைக்கும் உரிமையை ஆளுநர் வழங்குவார்.
ஆட்சியமைக்கும் உரிமை கிடைக்காமல் போகவும் வாய்ப்பு
அவ்வாறு ஆதரவு கிடைக்காமல் போகும் பட்சத்தில், தவெகவுக்கு ஆட்சியமைக்கும் உரிமை கிடைக்காமல் போகும். அதுபோன்றதொரு நிலைமை ஏற்பட்டால், இரண்டாவதாக அதிக இடங்களைப் பெற்றுள்ள திமுகவை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அழைப்பு விடுப்பார்.
அவர்களாலும் ஆட்சியமைக்க முடியாமல் போனால், , அடுத்த 6 மாதங்கள் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளுக்கும் மீண்டும் நடத்தப்படும்.
