சென்னை,ஏப்.30; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதுபோன்ற சூழலில், தேர்தலுக்குப் பின்னர் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
இதில் நடிகர் விஜய்யின் தவெக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இத்தகைய சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 30, 2026) தனது கட்சி வேட்பாளர்களுடன் மிக முக்கியமான ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.
பனையூர் அலுவலகத்தில் கூடும் வேட்பாளர்கள்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
17C படிவத்தின் முக்கியத்துவம்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் வேட்பாளர்கள் அனைவரும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட ’17C’ ஒரிஜினல் படிவத்தை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
17C படிவம் என்றால் என்ன?
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான மொத்த வாக்குகளின் துல்லியமான எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணம் இதுவாகும். வாக்கு எண்ணிக்கை நாளில் ஏதேனும் குளறுபடிகள் நடப்பதைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த படிவம் மிக முக்கியமானது.
கள நிலவரம் குறித்த தகவல்களை நேரடியாக பெறுகிறார்
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், எடப்பாடி தொகுதி நீங்கலாக மீதமுள்ள 233 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் களமிறங்கினர். நடிகர் விஜய் முதல்முறையாக ஒரு அரசியல் கட்சித் தலைவராகத் தேர்தலைச் சந்தித்துள்ளதால், தற்போதைய கள நிலவரம் குறித்து வேட்பாளர்களிடமிருந்து நேரடியாகத் தகவல்களைப் பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களும் முகவர்களும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் இந்தக் கூட்டத்தில் விஜய் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் தவெக?
தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப் போவதாகக் கூறி களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இன்றைய ஆலோசனைக் கூட்டம் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் எனப் பேசிக் கொள்கின்றனர்.
