Skip to content

திருப்பரங்குன்றம் விவகாரம்; பார்லி.யில் திமுக, பாஜக மோதல்

நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்குடன் திமுக அரசு செயல்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட பின்னரும், இரண்டாவது நாளாக நேற்றும் (04.12.2025) தடை விதிக்கப்பட்டது, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வி்ன் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுபோன்ற சூழலில், திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுகவின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை வழங்கியிருந்தனர். இதன்தொடர்ச்சியாக அவை இன்று காலை (05.12.2025) கூடியதும், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் முழக்கமிட்டனர். ஒத்திவைப்பு தீர்மானத்தை அவைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அனுமதிக்காததால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அதேவேளையில், மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, நூறாண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றும் இடத்திலிருந்து இம்முறையும் தீபமேற்றப்பட்டது எனக் கூறினார். தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க மதவாத சக்திகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி குறித்து டி.ஆர்.பாலு கூறிய கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.
அவரது பேச்சக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்குடன் தமிழ்நாடு அரசு செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தார். மக்களின் வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு அரசு தடுப்பதாக முருகன் சாடினார். எல்.முருகனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது இருக்கைக்கு எதிரே சென்று திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *