Skip to content

தமிழகத்தில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்! – பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

19-ல் இருந்து 339 ஆக உயர்ந்த பாதிப்பு

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 வகை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளை அணுகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்னென்ன அறிகுறிகள்?

பன்றிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடற்சோர்வு உள்ளிட்டவை இருக்கலாம். சிலருக்கு தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் இருந்தாலும் அதை சாதாரணமாக கருதி அலட்சியப்படுத்தாமல், அறிகுறிகள் தொடர்ந்தால் அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான அறிகுறிகள் இருப்பவர்கள் உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *