Skip to content

பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்; அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி என்று சாடல்!

டெல்லி,மே.11; மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிக்க முடியாமல் மக்கள் மீது பழி சுமத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாகச் சாடியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியும் பிரதமரின் 7 கோரிக்கைகளும்

வளைகுடா போர் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு 7 முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளார். தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்கவும், வீட்டிலிருந்தே வேலை (Work From Home) செய்யவும் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி விடுத்த அந்த 7 கோரிக்கைகள்:

  1. தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்க வேண்டும்,
  2. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்,
  3. முடிந்தவரை வீட்டிலிருந்தே வேலை செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்,
  4. சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்,
  5. ரசாயன உரங்களுக்குப் பதில் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  6. வெளிநாட்டுத் தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
  7. ஓராண்டு காலத்திற்கு வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ராகுல் காந்தியின் காட்டமான விமர்சனம்

பிரதமரின் இந்த அறிவுரைகளை “தோல்வியின் அடையாளம்” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: “நேற்று (மே 10, 2026) பிரதமர் மக்களிடம் தியாகங்களைக் கோரியுள்ளார். இவை வெறும் உபதேசங்கள் அல்ல, கடந்த 12 ஆண்டுகால ஆட்சியின் தோல்விக்கான ஆதாரங்கள். எதை வாங்க வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்று மக்களிடம் சொல்லும் நிலைக்கு நாட்டை அவர் தள்ளியுள்ளார்.”

ஒவ்வொரு முறையும் அரசு தனது தோல்விகளில் இருந்து தப்பிக்க மக்கள் மீது பழியைச் சுமத்துவதாகவும், ஒரு பலவீனமான பிரதமரால் நாட்டைச் சரியாக வழிநடத்த முடியாது என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர்களின் எதிர்வினை

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், வளைகுடா போர் தொடங்கி மூன்று மாதங்களாகியும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் பிரதமர் திகைப்பதாகக் கூறினார். நாட்டின் பொருளாதாரம் பேரழிவை நோக்கிச் செல்வதாகவும் அவர் எச்சரித்தார்.

அதேபோல், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், நாட்டின் உண்மையான பொருளாதார நிலை குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். கோவிட் காலத்தைப் போல வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் பரிந்துரைப்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரதமரின் 7 கோரிக்கைகள்-மக்களிடையே அதிர்வலை

மத்திய அரசின் பொருளாதார மேலாண்மை குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, பிரதமரின் இந்த 7 கோரிக்கைகள் சாமானிய மக்களிடையே கலவையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியமா அல்லது இது அரசின் திட்டமிடல் குறைபாடா என்ற விவாதம் தற்போது அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *