Skip to content

பெரம்பூர் தொகுதி: தவெக தலைவர் விஜய் பெயரில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

சென்னை,ஏப்.08; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் (ஏப்ரல் 6, 2026) முடிவடைந்தது. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 628 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பெரம்பூர் தொகுதியில் ‘விஜய்’ பெயரில் 4 பேர் மனுதாக்கல்!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், வேட்புமனுவில் தனது பெயரை சி. விஜய் என்று குறிப்பிட்டுள்ளார். பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு போட்டியாக விஜய் என்ற பெயரில் 2 பேரும், ஜோசப் என்ற பெயரில் 2 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதாவது ஜி.விஜய், கே.விஜய், எம்.ஜோசப், எஸ்.ஜோசப் என 4 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

வாக்காளர் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சியா?

வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில் இது போன்ற ‘பெயர் ஒற்றுமை’ உத்திகள் பயன்படுத்தப்படுவதாக தவெக தொண்டர்கள் கருதுகின்றனர்.

திமுக கோட்டையில் நேரடி சவால்

பெரம்பூர் தொகுதி நீண்டகாலமாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கு மிக அருகிலேயே இந்தத் தொகுதி அமைந்துள்ளது. இங்கு தற்போதைய திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் இங்கு போட்டியிடுவது ஒரு மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.

பிரபலமானவர் பெயரில் பலரை நிறுத்துவது பழைய உத்தி!

தேர்தல் வரலாற்றில் ஒரு பிரபலமான வேட்பாளர் போட்டியிடும்போது, அவருக்கு எதிராக அதே பெயர் கொண்ட பல சுயேச்சைகளை நிறுத்துவது ஒரு பழைய அரசியல் உத்தியாகும். சின்னமும் பெயரும் ஒரே மாதிரி இருக்கும்போது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் இது சிறிய அளவிலான வாக்கு சிதறலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் களமே இவ்வளவு சவால்கள் நிறைந்ததாக மாறியிருப்பது அக்கட்சியினரிடையே ஒருவித உத்வேகத்தை அளித்துள்ளது. பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் உண்மையான நாயகன் யார் என்பதைத் தேர்தல் நாளன்று வாக்குச்சீட்டின் மூலம் உறுதிப்படுத்துவார்கள். ‘4 விஜய்கள்’ களத்தில் இருந்தாலும், தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *