Skip to content

முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை; பைகள், உடைமைகளை சோதனையிட்ட அதிகாரிகள்!

தஞ்சாவூா்,மார்ச்.31: தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகிக்கப்படுவதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்படும் ரொக்கப் பணம் , பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு அவற்றை விடுவித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூரில் இன்று மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்துப் பரப்புரை மேற்கொள்கிறார் . இதற்காக முதல்வர் இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு வந்தார் . பின்னர் அவர் அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் சாலை வழியாக திருவாரூர் நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார் .

தஞ்சையில் முதலமைச்சரின் வாகனத்தை நிறுத்தி சோதனை

அந்த வாகனம் தஞ்சாவூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அதனை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த வாகனத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். தஞ்சாவூர் அருகே சாலியமங்கலம் நாலுரோடு பகுதியில் வாகனம் சென்றபோது அங்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் முதல்வரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

வாகனத்திலிருந்த உடைமைகளை சோதனையிட்ட பறக்கும் படை

வாகனத்தில் இருந்த பைகள் மற்றும் உடைமைகளை திறந்து சோதனையிட்டனர் . இந்தச் சோதனை ஓரிரு நிமிடம் நடைபெற்றது. வாகனத்தின் முன்சீட்டில் அமர்ந்து இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்தார். தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்குப் பிறகு திருவாரூர் நோக்கி முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனம் புறப்பட்டுச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *