Skip to content

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? சீனியர்களை புறந்தள்ளி இவருக்கு ராகுல் வாய்ப்புக் கொடுக்க என்ன காரணம்?

சென்னை,மார்ச்.05; திமுக-காங்கிரஸ் இடையே நிலவிவந்த பிணக்குக்கு தீர்வு காணப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு உடன்படிக்கை கையெழுத்தாகிவிட்டது. அந்த வகையில், மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து கிறிஸ்டோபர் திலக் என்ற புதுமுகத்திற்கு காங்கிரஸ் வாய்ப்புக் கொடுத்துள்ளது.

இதன் காரணமாக சீட்டை எதிர்நோக்கியிருந்த மூத்த தலைவர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச ராகுல் காந்தி முயற்சி எடுத்துள்ளாரா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்திருக்கிறது.

தவெக-வை காரணமாகக் காட்டி கூடுதலாக 3 சீட்டுகள்!

தவெகவை காரணமாகக் காட்டி கடந்த முறையைவிட 3 தொகுதிகளை கூடுதலாகப் பெற்றுவிட்டது காங்கிரஸ். இதுபோதாதென்று ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டையும் அடைந்துவிட்டது காங்கிரஸ்.

காங்கிரஸ்- திமுக கூட்டணியை இறுதி செய்ததில் சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கு வகித்தாலும், காங்கிரசின் ‘பேர வலிமை’யை உயர்த்தி கடந்த முறையைவிட கூடுதல் சீட்டுகள் பெற காரணம் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற ஜூனியர்கள்தான். கடைசி கட்டத்தில் தவெக பக்கம் ஜூனியர்களும், திமுக பக்கம் சீனியர்களும் கோஷ்டி சேர்ந்தனர். இதனால் டெல்லி தலைமை மட்டுமல்ல, திமுகவே ஒரு கட்டத்தில் திணறிப்போனது.

கடந்த முறையைவிட தொகுதிகளைக் குறைக்க திட்டமிட்ட திமுக?

அதிகம் கட்சிகள் கூட்டணியில் உள்ளதை காரணம் காட்டி, கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கிய 25 தொகுதிகளில் இருந்து ஓரிரு தொகுதிகளை குறைக்கலாம் என கணக்குப் போட்டிருந்த திமுக, கடைசியில் 3 தொகுதிகள் அதிகம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் என்பவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் பெயர் அறிவிக்கப்படும் வரை, இப்படியொருவர் காங்கிரஸில் உள்ளார் என்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது. அப்படி ஒரு புதுமுகத்தை அறிவித்து திணறடித்தது காங்கிரஸ்.

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

திருச்சியை சேர்ந்த திலக், அடிமட்டத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார். மேலும், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் உள்ளார்.

ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் தேசிய அளவில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தியது ஆகியவற்றில் கிறிஸ்டோபர் திலக் முக்கிய பங்காற்றியவர். மேலும், ராகுல், கார்கே ஆகிய இருவரிடமும் நெருக்கமானவராகவும் அறியப்படுகிறார். குறிப்பாக திலக் பட்டியலின சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் கவனிக்க வேண்டியது.

மூத்த தலைவர்களுக்கு ஷாக்!
மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் மாநிலங்களவை சீட்டுக்காக காய் நகர்த்தி வந்தனர். ஆனால், இவர்களையெல்லாம் புறந்தள்ளி இளைஞரான கிறிஸ்டோபர் திலக்கிற்கு வாய்ப்பளித்துள்ளார் ராகுல் காந்தி.

தேசிய அளவில் இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் ராகுல் காந்தி தீவிரமாக இருப்பதாகப் பேசிக் கொள்கின்றனர். ஏனென்றால் பாஜக, இதுபோல பல மாநிலங்களிலும் இளம் தலைவர்கள், புதிய முகங்களை முக்கிய பதவிகளில் அமரவைத்து வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

இளைஞர்களை கட்சிக்கு ஈர்க்க பாஜக கையாண்ட அதேபாணி!

சமீபத்தில் பாஜகவின் தேசிய தலைவராக 45 வயதே ஆன நிதின் நபின் தலைவராக்கப்பட்டார். பாஜகவை நோக்கி இளைஞர்கள் படையெடுக்க இது ஒரு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. அதே பாணியில் காங்கிரஸிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ராகுல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே கிறிஸ்டோபர் திலக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் திலக் தேர்ந்தெடுக்கப்பட்டதில் சீனியர்களுக்கு பெரும் அதிருப்திதான் என்றாலும், இனி இப்படித்தான் நடக்கும் என்ற தகவலும் அவர்களுக்கு சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

கூட்டணி விவகாரத்தில் ஜூனியர்களின் “கையே” ஓங்கியிருந்தது!

ஏற்கெனவே திமுக கூட்டணி விவகாரத்தில் ‘ஜூனியர்கள்’ கையே ஓங்கியிருந்தது. மேலிடத்தின் ஒப்புதல் இல்லாமல் இவ்வளவு தூரம் அவர்களால் துணிவாக பேச முடியாது என ‘சீனியர்களுக்கு’ ஒரு கட்டத்தில் தெளிவாக புரியவந்தது. அப்போதுதான், ஆட்டத்தின் திசை மாறியுள்ளதை அவர்களும் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.

அதுபோல கோஷ்டி அரசியலையும் காங்கிரஸில் ஒழிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிகளவில் இளைஞர்கள், புதுமுகங்கள் பொறுப்புக்கு வந்தால் தான் அது சாத்தியம் எனவும் தலைமை நினைக்கிறது. அதனையொட்டியே திலக் போன்றோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலிலும் மூத்தோருக்கு கல்தா கொடுக்க வாய்ப்பு?

இதேபோன்ற அதிர்ச்சி வைத்தியம் சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் இருக்கும் என்ற தகவலும் வெளியாகி ‘சீனியர்களுக்கு’ கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


திலக் என்ற ஒரு புதுமுகத்தை வைத்து “கோல்” அடிக்கும் ராகுல்?

கிறிஸ்டோபர் திலக் என்ற ஒரே ஒரு பெயரை வைத்து புதுமுகத்துக்கு வாய்ப்பு, இளைய தலைமுறைக்கு முன்னுரிமை, சீனியர்களுக்கு செக், பட்டியலின சிறுபான்மை சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் என பல ‘கோல்’களை அடித்துள்ளார் ராகுல் காந்தி. இதே பாணியில் அவரது ஆட்டம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *