சென்னை,மார்ச்.31; தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வேட்பாளர்கள் 1,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றனர். அவ்வாறு வென்றவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
- தியாகராய நகர் தொகுதி
இத்தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி 56,035 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனுக்கு 55,898 வாக்குகள் கிடைத்தன. வெறும் 137 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார்.
- மொடக்குறிச்சி
மொடக்குறிச்சியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதி 78,125 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77,884 வாக்குகளை பெற்றார். வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் சரஸ்வதி வெற்றி பெற்றார்.
3. தென்காசி
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான எஸ்.பழனி நாடார், 89,315 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியனுக்கு 88,945 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வெற்றி வாக்கு வித்தியாசம் வெறும் 370 தான்.
4. மேட்டூர்
மேட்டூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவின் எஸ். சதாசிவம் 97,055 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளர் எஸ். ஸ்ரீனிவாசபெருமாள் 96,399 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வாக்கு வித்தியாசம் 656 தான்.
5. காட்பாடி
திமுக பொதுச் செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான துரைமுருகன், காட்பாடி தொகுதியில் 85,140 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் வி.ராமுவுக்கு 84,394 வாக்குகள் கிடைத்தன. வாக்கு வித்தியாசம் வெறும் 746 தான்.
6. கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுகவின் கே. அசோக்குமார் 96,050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான செங்குட்டுவன் 95,756 வாக்குகள் பெற்று தோற்றுப்போனார். வாக்கு வித்தியாசம் 794 தான்.
7. விருத்தாசலம்
விருதாச்சலம் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் எம். ராதாகிருஷ்ணன் 77,064 வாக்குகள் பெற்று வென்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளர் ஜெ. கார்த்திகேயனுக்கு 76,202 வாக்குகள் கிடைத்தன. இவர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 862 ஆக இருந்தது.
8. நெய்வேலி
நெய்வேலி தொகுதியில் திமுகவின் ஆர்.சபா ராஜேந்திரன் 75,777 வாக்குகள் பெற்று வெற்றி கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.ஜெகன் 74,200 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 977 தான்.
இது மட்டுமல்லாமல் கிணத்துக்கடவு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் ஆயிரத்திலிருந்து 2000த்திற்குள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
