Skip to content

விஜய் ஆட்சியமைக்க விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் ஆதரவு; பெரும்பான்மையை எட்டியது தவெக! பதவியேற்பு எப்போது?

சென்னை,மே.09; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும், ஆட்சியமைக்க தேவையான ‘118’ என்ற மேஜிக் எண்ணை எட்ட முடியாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவளித்தது.

பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநர்

அக்கட்சியின் 5 உறுப்பினர்களது ஆதரவிற்குப் பின்னர் ஆதரவு பலம் 113 ஆக உயர்ந்தது. இருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லை எனக்கூறி, ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

ஆட்சியமைக்க முடியாமல் திண்டாடிய தவெக, திமுக கூட்டணிக் கட்சிகளின் கதவுகளை தட்டியது. ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு அந்தக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தது.

தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த இடதுசாரிகள்

இதனையேற்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக நேற்று (மே 8, 2026) அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் இன்று (மே 9, 2026) நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

தவெக ஆட்சியமைக்க விடுதலைச் சிறுத்தைகளும் ஆதரவு

இதனையடுத்து தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்த திருமாவளவன், அதற்கான கடிதத்தையும் அவர்களிடம் வழங்கினார். விசிகவின் 2 உறுப்பினர்களையும் சேர்த்து தவெக பெரும்பான்மையை எட்டியது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜூனா, “அனைத்து தோழர்களுக்கும் எங்களுடைய நன்றி. ஜனநாயகம் காக்கப்படும். தமிழ்நாட்டு மக்களுடைய ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக விஜய் உருவாவார்” எனத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு

தவெகவுக்கு ஆதரவளித்து விசிக தலைவர் திருமாவளவன் வழங்கியுள்ள கடிதத்தில், “தமிழக மக்களுக்கு நிலையான, ஜனநாயக முறையிலான ஆட்சி கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விசிக தனது 2 எம்எல்ஏ-க்களின் ஆதரவையும் தவெகவுக்கு எந்த நிபந்தனையும் இன்றி வழங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிகவைத் தொடர்ந்து ஐயுஎம்எல் கட்சியும் தவெகவிற்கு ஆதரவு

இடதுசாரிகளைப் போலவே விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது. ஆக, மொத்தம் 120 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது தவெக. அடுத்தக் கட்டமாக ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகளை எதிர்கொண்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது: திருமாவளவன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தவெகவிற்கு ஆதரவு வழங்கியதற்கான காரணங்களை விவரித்தார்.

தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது, 108 இடங்களைப் பெற்றும் தவெக ஆட்சியமைக்க விசிக தடையாக இருந்துவிடக் கூடாது என்ற 2 காரணங்களுக்காக மட்டுமே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியில் இருந்து வழங்கியிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

இடதுசாரிகளுடன் இணைந்து பேசி முடிவெடுத்தோம்

தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் விசிக, இடதுசாரிகள் இணைந்து பேசினோம். மக்கள் நலக் கூட்டணி இருந்தபோதே கொள்கை அடிப்படையிலும், மக்கள் பிரச்னைகளில் ஒருங்கிணைந்து களமாடி வருவதையும் பழக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்தச் சூழலில் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து முடிவெடுப்போம் என்று கலந்து பேசினோம். இந்த நிலையில் சிபிஎம், சிபிஐ மாநிலக் குழுவில் எடுத்த முடிவை ஒட்டி விசிக உயர்நிலைக் கூட்டத்தில் கலந்தாலோசித்து உயர்நிலைக் குழு ஒப்புதலோடு முடிவை அறிவிப்பது என முடிவு எடுத்தோம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *