சென்னை,மே.14; தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் மது விற்பனையை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதைத் தடுக்க மதுபானக் கடைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்தும் புதிய அரசு
பொதுமக்களின் நலன் கருதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
21 வயது வரம்பு: சட்ட விதிகள் சொல்வது என்ன?
சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய கலாச்சாரச் சீரழிவைத் தடுக்க ‘தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003, விதி 11ஏ’ (Tamil Nadu Liquor Retail Vending Rules 2003, Rule 11A) மிகத் தெளிவாக வழிகாட்டுகிறது. இந்த விதியின்படி, 21 வயது பூர்த்தியடையாத எவருக்கும் மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது வழங்கவோ கூடாது.
பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்த சட்ட விதியை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தற்போது அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் கடை பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
வாடிக்கையாளரின் வயது குறித்து சந்தேகம் ஏற்பட்டால், அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும்.
21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விதித்துள்ள நடைமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.
சிறார்களிடையே மதுப்பழக்கத்தை தடுக்க நடவடிக்கை
சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது விற்பனை நேரத்தை முறைப்படுத்துவதுடன், வயது வரம்பைக் கண்டிப்புடன் பின்பற்றுவதன் மூலம் இளைய தலைமுறையினரை மதுவின் பிடியிலிருந்து காக்க முடியும் என்று அரசு நம்புகிறது.
இதே மாதிரியான உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளதாக பேச்சு
ஆனால், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுவிற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் இருப்பதாக, மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவோர் கூறுகின்றனர்.
எதிர்காலத் தூண்களாக விளங்கும் இளைஞர்கள் சிறு வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு ஆளாவதைத் தடுப்பது காலத்தின் கட்டாயமாகும். டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த எச்சரிக்கை எந்தளவுக்கு பலனைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
