Skip to content

அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கிய விவகாரம்; ராமதாஸ் தொடுத்த வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வாரம் அவகாசம்!

சென்னை,பிப்.02; பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக,கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடுத்த வழக்கில்,தேர்தல் ஆணையம் 3 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்புமணிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு; ராமதாஸ் வழக்கு

பாட்டாளி மக்கள் கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாஸுக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. இதுபோன்ற சூழலில் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி, கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது வழக்கில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“பாமகவிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணிக்கு கடிதம் அனுப்பியது தவறு”

கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடராக தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாம்பழ சின்னம் முடக்கப்படும் எனக் கூறியிருந்தனர்!

மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், இன்று (பிப்ரவரி 2) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த அவர்கள், தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *