சென்னை,மார்ச்.22; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் கடும் இழுபறி நிலவி வருகிறது.
குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்பார்க்கும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், திமுக ஒதுக்க முன்வரும் இடங்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியால் தொகுதிப் பங்கீடு முடிந்தபாடில்லை.
தொகுதிப் பங்கீடு அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளியாகும்
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இரண்டொரு நாளில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று தான் கூட்டணியின் நலன்களும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டார். இன்றைய அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
இழுபறி கிடையாது, தாமதமாகிறது என்பதே உண்மை
தொகுதி பங்கீடு இன்னும் கையெழுத்தாகவில்லை என்பது உண்மைதான், ஆனால், இழுபறி என்ற நிலை இல்லை; தாமதமாகிறது எனவும் அவர் கூறினார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணிக்கு வலுவான சக்தியாக உள்ளது, விரைவில் அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், சசிகலா – ராமதாஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் திருமாவளவன் கூறினார்.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு திருமாவளவன் முகநூல் வழியே நேரலையில் தொண்டர்களிடம் பேசிய போது, “திமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் குறைவாகவே கிடைக்கும். கட்சியில் பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
சீட் கேட்டு கட்சியினர் என்னை நெருக்குகின்றனர்: திருமாவளவன்
தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு கட்சியினர் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றனர் என திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்தார்.
தொகுதிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில், வேட்பாளர் தேர்வில் மிகக் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு விசிக தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் வேட்பாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வெளிமாவட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
