Skip to content

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்று இறுதி? சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

சென்னை,மார்ச்.23; 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
திமுகவில் விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

இதேபோன்று அதிமுக கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவே இல்லை. உத்தேசமாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சில தினங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். கூட்டணி கட்சிகளின் தலைவர்களான அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோரும் டெல்லி சென்று பாரதிய ஜனதா மேலிடத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டி?

அப்போது அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்திற்குப் பதிலாக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கப்படாமலேயே உள்ளது.

பியூஷ் கோயல் வருகை; தொகுதிப்பங்கீடு நிறைவு பெறும்?

இதுபோன்ற சூழலில், மத்திய அமைச்சரும் பாஜக மேலிடப் பார்வையாளருமான பியூஷ் கோயல் இன்று (மார்ச் 23, திங்கள்) காலை 9.50 மணிக்கு சென்னை வருகிறார்.

அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

யாருக்கு எத்தனை தொகுதிகள்?; இன்றே அறிவிக்கப்படலாம்!

ஒரே நேரத்தில் தொகுதிப் பங்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அதிமுக-பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, இந்தக் கூட்டணியில் தொகுதிகள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது:

அதிமுக: சுமார் 165 – 170 தொகுதிகள்

பாஜக: 25 – 30 தொகுதிகள்

பாமக: 16 – 18 தொகுதிகள்

அமமுக (டிடிவி தினகரன்): 10 தொகுதிகள்

தமாகா மற்றும் இதர கட்சிகள்: தலா 1 – 3 தொகுதிகள்

சில தொகுதிகளை குறிவைத்திருக்கும் பாஜக

குறிப்பாக சென்னை, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட தொகுதிகளைப் பெறுவதில் பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. மயிலாப்பூர், வேளச்சேரி அல்லது தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை பாஜக பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பியூஷ் கோயலின் இன்றைய வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடைந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், அதிமுக கூட்டணி தனது முழுநேரத் தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தும். வரும் நாட்களில் மற்ற கூட்டணிகளின் நிலைப்பாடும் தெளிவாகும் என்பதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *