சென்னை,மார்ச்.23; தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அதேபோன்று, வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி பார்க்கையில் இன்னும் ஒரு வாரமே உள்ளது.
சென்னை வருகை தந்த பியூஷ் கோயல்!
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்துள்ளார். அவரை சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வருகை தந்தனர்.
3 முக்கிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்
இதன்பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 3 முக்கிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி பாரதிய ஜனதா 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் தொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
