Skip to content

பெரம்பூரில் களம் காண்கிறாரா நடிகர் விஜய்? திமுக சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர் யார்?

சென்னை,மார்ச்.24; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வேட்பாளர்கள் நேர்காணல், தொகுதிப் பங்கீடு என அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன.

தேர்தலில் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ள தவெக, 234 தொகுதிகளுக்கும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

பெரம்பூர் தொகுதியில் களம் காண்கிறாரா விஜய்?

ஆனால், கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“சென்னை இனி தவெகவின் கோட்டையாக மாறும்!”

கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, சென்னையை திமுக கோட்டை என்று சொல்வார்கள்; அதனால் எம்ஜிஆர்,ஜெயலலிதா கூட சென்னையில் அதிகம் நின்றதில்லை; ஆனால், இன்றிலிருந்து சென்னையில் தவெக தான் வெற்றிகளைப் பெறும்; அதனால் தான் விஜய் பெரம்பூரில் நிற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

கொளத்தூர், ஆர்.கே. நகர் உள்ளிட்ட தொகுதியிலும் விஜய் போட்டியிட விரும்பலாம்; வட சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்கத்தான் விஜய் விரும்புவார் என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.

திமுக சார்பில் சேகர் பாபு களமிறக்கப்படுகிறாரா?

பெரம்பூரில் விஜய் களமிறங்கும் பட்சத்தில் அவரை எதிர்த்து திமுக சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது குறித்து அக்கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.

துறைமுகம் தொகுதி எம்எல்ஏ-வும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு பெரம்பூர் தொகுதியில் களமிறக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. வடசென்னையைச் சேர்ந்த சேகர்பாபு, எத்தகைய சூழலையும் திறம்பட எதிர்கொள்ளக்கூடியவராக அறியப்பட்டுள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணின் பெயரும்…

இவர் தவிர, முன்பு இயங்கிவந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் கட்சி நடத்திவரும் முன்னாள் எம்எல்ஏவான எர்ணாவூர் நாராயணின் பெயரும் அடிபடுகிறது.

பெரம்பூர் தொகுதியில் நாராயணனின் சமூகத்தினர் பெருமளவில் இருப்பது அவருக்கு சாதகமாகும் எனக் கணிக்கப்படுகிறது.

திமுக இளைஞரணி துணைச்செயலர் ஜோயலுக்கு வாய்ப்புண்டா?

இவர்கள் தவிர திமுகவின் இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் பெயரும் உலா வருகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த அவர், உதயநிதிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டுள்ளார்.இவரும் எர்ணாவூர் நாராயணன் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.

சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கேட்டு வருவதால், அவர்களில் யாரேனும் ஒருவருக்கு சீட் கொடுக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.

எது எப்படியோ, வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன்னரே பெரம்பூர் தொகுதி, நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக உருவெடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *