Skip to content

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 8 இடங்கள்; நீண்ட நாள் இழுபறி முடிவுக்கு வந்தது!

சென்னை,மார்ச்.24; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

விசிக-வின் கோரிக்கை மற்றும் திமுக-வின் முடிவு

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் நான்கில் வெற்றி பெற்றது.ஆனால், இந்த முறை கட்சியின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதல் தொகுதிகளை விசிக தலைமை எதிர்பார்த்தது.

இதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்
இன்று (மார்ச் 24, செவ்வாய்) பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

‘பானை’ சின்னத்திலேயே போட்டியிடுகிறது விடுதலைச் சிறுத்தைகள்

தொகுதிகளின் எண்ணிக்கை: கடந்த முறையை விட கூடுதலாக 2 இடங்கள் சேர்த்து மொத்தம் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிச் சின்னம்: கடந்த முறையைப் போலவே இந்த முறையும் விசிக தனது சொந்தச் சின்னமான ‘பானை’ சின்னத்திலேயே போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

பரிசீலனை: ஒதுக்கப்படும் 8 தொகுதிகளில் பொதுத் தொகுதிகள் எத்தனை, தனித் தொகுதிகள் எத்தனை என்பது குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 சீட் கிடைத்துள்ளதால் விசிக தொண்டர்கள் உற்சாகம்!

விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கவில்லை என்றபோதிலும், 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அக்கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தபடியாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *