Skip to content

சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்ந்த் வர்மா பதவி விலகல்; கண்டனத் தீர்மான விசாரணைக்கு மத்தியில் திடீர் முடிவு!

அலகாபாத்,ஏப்.10; அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தன் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்க விசாரணை (Impeachment Proceedings) நடைபெற்று வரும் நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பின்னணி: வீட்டில் சிக்கிய கணக்கில் வராத பணம்

கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி, நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்கும் பணியின் போது, அங்குள்ள ஒரு அறையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு உள்ளகக் குழுவை (In-house committee) அமைத்தார். அந்த குழு நடத்திய விசாரணையில், நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை பதவி விலகுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால், அவர் ராஜினாமா செய்ய மறுத்ததால், அவர் மீண்டும் தனது தாய் நீதிமன்றமான அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் மற்றும் அவரிடமிருந்து நீதித்துறை பணிகள் பறிக்கப்பட்டன.

நாடாளுமன்ற பதவி நீக்க தீர்மானம்

உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில், நாடாளுமன்றத்தின் 146 உறுப்பினர்கள் நீதிபதி வர்மாவிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை (Impeachment Motion) கொண்டு வந்தனர். இதற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நீதிபதி அரவிந்த் குமார் (உச்ச நீதிமன்றம்), நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் (மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி) மற்றும் மூத்த வழக்கறிஞர் வாசுதேவ ஆச்சார்யா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்.

பதவி விலகல் கடிதத்தில் கூறியுள்ளது என்ன?

தன் மீதான விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவி விலகல் கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதன் நகல் தற்போதைய இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“மிகுந்த மனவேதனையுடன் எனது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவிற்கான காரணங்களைக் கூறி குடியரசுத் தலைவரின் மேன்மையான அலுவலகத்திற்கு சுமையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.”

நீதித்துறையில் ஊழல், வெளிப்படைத்தன்மை குறித்து விவாதம்

நீதித்துறையில் ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த பதவி விலகல் முக்கியத்துவம் பெறுகிறது. பதவி நீக்க தீர்மானம் மூலம் ஒரு நீதிபதி நீக்கப்படுவதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்வது, அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உணர்த்துவதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *