Skip to content

விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும்; திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை,மே.07; தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்துள்ளது.

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக சார்பில் ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் காங்கிரஸ் ஆதரவு

இதில், 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி அதிகாரப் பகிர்வு என்ற நிபந்தனையுடன் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், விஜய்க்கு ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பான்மைக்கு இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.

தவெகவுக்கு ஆதரவா?; விசிக-வின் கூட்டம் திடீர் ரத்து

இதுபோன்ற சூழலில், தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 7, வியாழன்) அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்-எனவே விஜய்யை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல: திருமா

ஆனால், ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் குழப்பம் உருவாவதற்கு இடம் கொடுக்கிறார்-இது ஏற்புடையதல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“ஆதரவை காட்டிவிட்டு பதவியேற்கும்படி ஆளுநர் கூற முடியாது”

118 எம்எல்ஏக்களின் ஆதரவை காண்பித்துவிட்டு பதவியேற்புக்கு வாருங்கள் என ஆளுநர் கூற முடியாது; தவெக தலைவர் விஜய்க்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பதை சட்டப்பேரவையில் தான் நிரூபிக்க வேண்டும்; அமித் ஷா விளையாட்டு தமிழ்நாட்டில் அரங்கேறுகிறது; பாஜக தலையீட்டை தமிழ்நாட்டில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

மக்கள் தீர்ப்பின்படி விஜய் முதலமைச்சராக பதவியேற்பதுதான் சரியானது; எங்களுடன் இணைந்து தவெக ஆட்சியமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலிக்கிறோம்; ஆட்சியமைக்க ஆதரவு கோரி விஜய் கடிதம் எழுதியுள்ளார்; தொலைபேசியிலும் பேசினார்; ஆலோசித்து முடிவு செய்வோம் என்று கூறியிருக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *