Skip to content

தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை,மே.07; நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 59 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய எம்எல்ஏக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தனித்தனியாக நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்த நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே 7, 2026) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

புதிய எம்எல்ஏக்கள் கூட்டம்; 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், புதிய எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி அமைக்கத் தேவையான முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்; சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி; காங்கிரஸ் தனது பழைய மாற்றிக்கொள்ளவில்லை (கண்டனம் தெரிவித்து தீர்மானம்) என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக-திமுக கூட்டணியா? திமுக மறுப்பு-அதிமுக மௌனம்!

இதனிடையே, அதிமுக-திமுக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடந்ததாக நேற்றிரவு (மே 6, 2026) தகவல்கள் பரவின. அதிமுக ஆட்சியமைக்க உள்ளதாகவும், திமுக வெளியிலிருந்து ஆதரவளிக்கும் என்றும் தகவல்கள் பல்வேறு மட்டங்களில் பரவியது.

தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவிலும் இந்தத் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை திமுக மறுத்த நிலையில், அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

10ஆம் தேதி வரை சென்னையில் தங்க எம்எல்ஏக்களுக்கு உத்தரவு!

இந்தநிலையில், திமுக எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பான எதிர்க்கட்சியாகவே செயல்பட விருப்பம்; ஆனால், கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது; மூத்த நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம்; எனவே, வரும் 10ஆம் தேதி வரை திமுக எம்எல்ஏ-க்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும்; திமுகவின் திட்டங்கள் தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தக்க வைக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.க.ஸ்டாலின் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவு திமுக வட்டாரத்தில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் பேசு பொருளாகி உள்ளது. இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று தீவிரமாக அலசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *