Skip to content

‘தி.மு.க. – அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியமே’ – ஆளுநர் அர்லேகர் பரபரப்பு பேட்டி!

சென்னை,மே.08; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு மத்தியில், மாநில பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அளித்துள்ள பேட்டி மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பான்மை இல்லாத அரசுக்கு அனுமதியில்லை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் (பெரும்பான்மை) தவெக-விடம் இல்லை. இந்தச் சூழலில், தன்னை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி விஜய் இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

பெரும்பான்மை இன்றி யாரையும் ஆட்சியமைக்க அழைக்க முடியாது

இது குறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள ஆளுநர் அர்லேகர், “118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலம் இல்லாமல் யாரையும் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. மைனாரிட்டி அரசு அமைந்து, பின்னர் குதிரை பேரம் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“118 எம்எல்ஏ-க்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை-விஜய் பெரும்பான்மை எண்ணுடன் வந்தால் ஆட்சியமைக்க அழைக்கத் தயார்” என்றும் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கூறியிருக்கிறார்.

விஜய் ஆட்சியமைப்பதை நான் தடுக்கின்றேனா?

ஆனால், விஜய்யிடம் எந்தப் பெரும்பான்மையும் இல்லை; விஜய் ஆட்சியமைப்பதை நான் தடுப்பதாக எப்படிச் சொல்ல முடியும்? விஜய் ஆட்சியமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அரசியல் கட்சிகளிடையே ஒரு முடிவு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு தற்போதையச் சூழலுக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள அர்லேகர், திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் அது சட்டப்படி சாத்தியம்தான் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அடுத்தது என்ன? எதிர்நோக்கும் தமிழ்நாடு

சட்ட விதிகளின்படியே முடிவு எடுக்கப்படும் என்பதில் ஆளுநர் உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் புதிய அரசு அமையுமா அல்லது அரசியல் மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு சூழல் நிலவி வருகிறது. ஆளுநர் அர்லேகரின் இந்த அதிரடி கருத்து, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் மற்றும் த.வெ.க. இடையே புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் எடுக்கப்படவுள்ள முடிவே தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *