திருவான்மியூரில் மாணவர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
காமராஜர் காலை உணவு திட்டம் நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. திருவான்மியூர் காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி, திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் நடுநிலைப் பள்ளி மாணவர்களும் பள்ளி வேலை நாட்களில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.
கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்
இந்த விரிவாக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். இதன் மூலம் ஏற்கனவே திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களுடன் சேர்த்து, மொத்தம் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விரிவாக்கத் திட்டம் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் விரிவாக்கத்திற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலை உணவுத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.
செப்.22 முதல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம்
முதலில் இந்த திட்ட விரிவாக்கம் செப்.17ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் விஜயின் வெளிநாட்டு பயணத்தைத் தொடர்ந்து தொடக்க தேதி செப்.22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதன்படி நாளை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அங்கு திட்ட விரிவாக்கம் தொடர்பான செயல்பாடுகள் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதுடன், காலை உணவு கிடைப்பதன் மூலம் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வந்து கல்வியில் முழு கவனம் செலுத்துவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் நாளை திருவான்மியூரில் தொடங்கி வைக்கிறார்.
