Skip to content

#மேகதாது அணை வழக்கு: அதிமுக மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

  • POLITICAL

சட்டப்பேரவை தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மேகதாது அணை வழக்கு தொடர்பாக அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் 19ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், மேகதாது அணை விவகாரத்தைத் தீர்க்க மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டது.

இந்தத் திருத்தத்தை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தீர்மானத்தில் திருத்தம்

மேகதாது அணை வழக்கு விசாரணையின்போது, ஜூன் 18ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட தீர்மான நகலில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற பகுதி இடம்பெறவில்லை என அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், அந்தத் திருத்தம் குறித்து முறையான விவாதம் நடத்தப்படாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, திருத்தப்பட்ட தீர்மானம் முதலமைச்சரின் கோரிக்கையின் அடிப்படையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதாகவும், அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது சட்டப்பேரவையில் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சிகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் நீதிமன்றத் தலையீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அரசு தரப்பு வாதிட்டது.

இந்நிலையில், மேகதாது அணை வழக்கில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *