ரேஷன் கார்டுகள் முடக்கம் தொடர்பாக மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது. கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் பயனாளிகளின் ரேஷன் அட்டை மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவு தானிய உரிமைகள் அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் செயலற்ற நிலையில் உள்ள ரேஷன் கார்டுகள், ஒரே நபருக்கு பல இடங்களில் உள்ள இரட்டைப் பதிவுகள் மற்றும் தகுதியற்ற பயனாளிகள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து தரவுத்தளத்தை சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
உடனடியாக பெயர் நீக்கம் இல்லை
6 மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காத பயனாளிகளின் பெயர்கள் உடனடியாக ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படாது. முதலில் அவர்களின் ரேஷன் அட்டை தற்காலிகமாக முடக்கப்படும்.
இதன்பிறகு, அடுத்த 3 மாதங்களுக்குள் e-KYC மற்றும் கள ஆய்வு மூலம் அந்த பயனாளர் உண்மையில் தகுதியானவரா என்பது மீண்டும் சரிபார்க்கப்படும். தகுதி உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கையின் மூலம் ரேஷன் சலுகைகளை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
1.58 கோடி பயனாளிகளின் சலுகைகள்
மத்திய அரசின் புதிய நடைமுறையின்படி, கடந்த 6 மாதங்களாக உணவு தானிய உரிமைகளை பயன்படுத்தாத சுமார் 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் சலுகைகளை அக்டோபர் 1 முதல் தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையின் நோக்கம் உண்மையான மற்றும் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே பொது விநியோகத் திட்டத்தின் சலுகைகள் சென்றடைவதை உறுதி செய்வதாகும்.
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பதிவுகள் சரிபார்ப்பு
ரேஷன் கார்டு தரவுகளில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகளை சரிசெய்வதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த பிறகும் அவரது பெயர் ரேஷன் கார்டில் தொடர்ந்து இருப்பது, குடும்பம் நிரந்தரமாக வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்த பிறகும் பழைய பதிவு தொடர்வது, ஒரே பயனாளி ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது போன்ற விவரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, புதிய SOP-களின் கீழ் செயலற்ற மற்றும் இரட்டைப் பயனாளிகள் தொடர்பான ரேஷன் கார்டுகளுக்கு முதலில் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு, பின்னர் 3 மாதங்களுக்குள் e-KYC மூலம் மீண்டும் சரிபார்ப்பு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி அக்டோபர் 1, 2026 முதல் SMART-PDS-ல் செயல்படுத்தப்பட உள்ளது.
e-KYC மூலம் தகுதியை உறுதி செய்ய வேண்டும்
ரேஷன் கார்டு பயனாளிகள் தங்களது e-KYC நடைமுறையை நிறைவு செய்வது முக்கியமாகிறது. ஜூலை 30, 2026 நிலவரப்படி நாடு முழுவதும் e-KYC நிறைவு விகிதம் 90.64% ஆக இருந்ததாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.
எனவே, ரேஷன் கார்டு முடக்கம் தொடர்பாக சந்தேகம் உள்ளவர்கள் தங்களது மாநிலத்தின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலின்படி e-KYC உள்ளிட்ட தேவையான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம்.
நாடு முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள்
பொது விநியோகத் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பில் செயல்படுத்தப்படுகிறது. ரேஷன் கார்டு வழங்குதல், தகுதியான குடும்பங்களை அடையாளம் காணுதல் மற்றும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளை கண்காணித்தல் உள்ளிட்ட அம்சங்களில் மாநில அரசுகளுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
இதனிடையே, செயலற்ற மற்றும் இரட்டைப் பதிவுகளை கண்டறிந்து நீக்குவதன் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் தரவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
