Skip to content

அண்ணா நகர் பார்க்கிங் மாற்றம்; 2,100 புதிய பார்க்கிங் இடங்கள் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

சென்னையின் மிக முக்கியமான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக விளங்கும் அண்ணா நகரில், வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘அண்ணா நகர் அக்கம்பக்க பார்க்கிங் திட்டம்’ (Anna Nagar Neighborhood Parking Project) என்ற பெயரில் சுமார் 26.43 கிலோமீட்டர் சாலைப் பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

2,100 பார்க்கிங் இடங்கள் மற்றும் சாலை விரிவாக்கம்

இந்தத் திட்டத்தின் கீழ், அண்ணா நகரின் முக்கிய சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மொத்தம் 2,100 வாகன நிறுத்துமிடங்கள் முறைப்படுத்தப்பட உள்ளன.1ஆவது அவென்யூ முதல் 6ஆவது அவென்யூ வரையிலான 12.85 கி.மீ நீளமுள்ள முதன்மைச் சாலைகளில் 1,699 பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்படும். 1ஆவது மெயின் ரோடு முதல் 17ஆவது மெயின் ரோடு வரையிலான பகுதிகளில் 401 பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

நவீன கண்காணிப்பு மற்றும் அபராத நடவடிக்கைகள்

சாலை ஓரங்களில் அத்துமீறி வாகனங்களை நிறுத்துவதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளது. இப்பகுதி முழுவதும் 1,300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.. சுமார் 230 பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்களுக்கு 110 உடல் கேமராக்கள் வழங்கப்படும்.

15 மின்சார பைக்குகள் மற்றும் 120 மிதிவண்டிகள் மூலம் பணியாளர்கள் தொடர்ந்து ரோந்து வருவார்கள். விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 2 இழுவை வாகனங்கள் மற்றும் 700 வீல் கிளாம்ப்கள் பயன்படுத்தப்படும்.

கட்டண முறை மற்றும் நேரம்

இந்த பார்க்கிங் திட்டம் தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை (14 மணிநேரம்) செயல்படும். முறையாகக் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்துவதன் மூலம் தேவையற்ற சாலை நெரிசல்கள் தவிர்க்கப்படும். மேலும், ஒரு மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு மற்றும் செயலி மூலம் போக்குவரத்து காவல்துறையினரின் அனுமதியுடன் விதிமீறல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *