கௌகாத்தி,ஏப்.25; அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மா தொடர்ந்த மோசடி மற்றும் அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் முன்ஜாமீன் மனுவை கௌஹாத்தி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
காங்கிரஸ் மூத்த தலைவர் தலைவர் பவன் கேரா சமீபத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் ஆன்டிகுவா ஆகிய மூன்று நாடுகளின் பாஸ்போர்ட்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் வெளிநாடுகளில் பெரும் சொத்துகளைக் குவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ரினிகி புயான், பவன் கேரா மீது கௌகாத்தி குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.
நீதிமன்றத்தின் காரசாரமான கருத்துகள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திவ்ஜோதி சைக்கியா, பவன் கேராவிற்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்:
அரசியல் ஆதாயம்: முதலமைச்சர் ஒரு அரசியல்வாதி, ஆனால் அவரது மனைவி அரசியலில் இல்லாத ஒரு தனிநபர். அரசியல் ஆதாயத்திற்காக ஒரு அப்பாவிப் பெண்ணை இந்த விவகாரத்தில் பவன் கேரா இழுத்துள்ளது ஏற்புடையதல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: ரினிகி புயானுக்கு மூன்று பாஸ்போர்ட்கள் உள்ளன என்பதையோ, அவர் அமெரிக்காவில் பெரும் முதலீடு செய்துள்ளார் என்பதையோ பவன் கேரா சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை.
போலி ஆவணங்கள்: பவன் கேரா தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இது வெறும் அவதூறு வழக்கு மட்டுமல்ல, ஆவணங்களை மோசடி செய்த (Forgery) பிரிவின் கீழும் வருவதாக நீதிமன்றம் கருதியது.
காவல்துறை விசாரணை ஏன் அவசியம்?
நீதிபதி தனது உத்தரவில், பவன் கேராவை காவலில் எடுத்து விசாரணை நடத்துவது (Custodial Interrogation) அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். பவன் கேராவிற்கு இந்த போலி ஆவணங்களை வழங்கியது யார்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? போன்ற விவரங்களை கண்டறிய விசாரணை தேவை என நீதிமன்றம் கருதுகிறது.
தனிநபர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கூடாது
அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைக்கும்போது தனிநபர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சட்ட ரீதியான ஆதாரங்கள் இன்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
