Skip to content

ஆளுநருடன் விஜய் 3ஆவது முறையாக சந்திப்பு; பெரும்பான்மைக்கான ஆதரவு இல்லாததால் தவெக ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி!

சென்னை ,மே.09; அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதால் பிற கட்சிகளை தவெக நாடியது. அப்போது 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.

பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லை

2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய் கடிதம் வழங்கினார். ஆனால், ‘ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தவெக-வுக்கு ஆதரவளித்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள்

பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் தலைவர்களை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரினர்.

இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வந்த இடதுசாரி கட்சிகள், இறுதியில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக நேற்று (மே 8, 2026) அறிவித்தன.

ஆதரவுக் கடிதங்களை வழங்கிய இடதுசாரி கட்சிகள்

இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் அக்கட்சித் தலைவர்கள் வழங்கினர். இதன்மூலம் தவெக பலம் 116 ஆக உயர்ந்தது.

இதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் அர்லேகரிடம் தவெக தலைவர் விஜய் வழங்கினார். எனினும், பெரும்பான்மை (118 உறுப்பினர்கள்) ஆதரவு கிடைக்காததால் தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு என வெளியான தகவல்

இதற்கிடையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் (ஐயூஎம்எல்) தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலை அக்கட்சி மறுத்தது.

தவெக-வுக்கு ஆதரவா? இன்று அறிவிக்கிறார் திருமாவளவன்

இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடனும் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இடதுசாரி தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான தனது முடிவை இன்று (மே 9, 2026) காலை தெரிவிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆளுநரை 3ஆவது முறையாக சந்தித்த விஜய்

இதுபோன்ற சூழலில், நேற்று மாலை 7 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், ஆளுநர் அர்லேகரை 3ஆவது முறையாக சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை வழங்கினார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் பொருளாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இடதுசாரி தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய விஜய்

இதன்பின்னர், தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்ற விஜய், அங்கு அக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

மேஜிக் (118) எண்ணை எட்டாததால் ஆட்சியமைக்க அழைப்பு வரவில்லை

இருப்பினும், தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்காததால், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. திருமாவளவன் தனது முடிவை இன்று (மே 9, 2026) காலை அறிவிக்க உள்ளார். அவர் ஆதரவளித்தால் தவெகவின் பெரும்பான்மை பலம் 118ஆக உயரும். இது உறுதி செய்யப்பட்ட பிறகே, ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் என்று தெரிகிறது.

ஐதாராபாத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் ?

இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 4 பேர் ஐதராபாத்தில் உள்ள ஓட்டலில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னொரு எம்எல்ஏவான பிரவீன், இவர்களுடன் செல்லவில்லை. இவர் பெங்களூரு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *