டெல்லி,மார்ச்.28; இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு பிரமாண்டமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC), சுமார் 2.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ராணுவ கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நேற்று (மார்ச் 27, 2026) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council) கூட்டத்தில், ராணுவம், விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் நவீனமயமாக்கலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
எஸ்-400 ஏவுகணை அமைப்பு: வான் பாதுகாப்பில் புதிய மைல்கல்
கூட்டத்தி்ல, ரூ. 2.38 லட்சம் கோடிக்கு ராணுவ உபகரணங்கள், தளவாடங்கள், விமானங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த கொள்முதலில் மிக முக்கியமான ஒன்றாக ரஷ்யாவின் S-400 (Sudarshan) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் கூடுதல் அலகுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மோதலின் போது பாகிஸ்தானின் ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய பெருமை இந்த அமைப்புக்கு உண்டு.
ஏவுகணை தொகுப்புகள் மே, டிச. மாதத்திற்குள் வரவுள்ளன
தற்போது 4-வது மற்றும் 5-வது ஏவுகணை தொகுப்புகள் முறையே மே மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா வரவுள்ளன. விமானப்படை மற்றும் தரைப்படைக்கான நவீன உபகரணங்கள் விமானப்படையின் பழைய AN32 மற்றும் IL-76 ரக விமானங்களுக்கு மாற்றாக, சுமார் 60 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் (Medium Transport Aircraft) வாங்கப்பட உள்ளன. இதற்காக எம்பிரேயர், லாக்ஹீட் மார்ட்டின் போன்ற சர்வதேச நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.
தரைப்படைக்காக உள்நாட்டு தனுஷ் பீரங்கிகள் கொள்முதல்
தரைப்படைக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 155 மிமீ தனுஷ் (Dhanush) பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது புகழ்பெற்ற போபர்ஸ் பீரங்கிகளின் மேம்படுத்தப்பட்ட இந்திய பதிப்பாகும்.
மேலும், எதிரி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழிக்க ரஷ்யாவின் ‘பான்ட்சீர்-எஸ்1’ (Pantsir-S1) அமைப்புகளும் வாங்கப்பட வாய்ப்புள்ளது.
கடலோர காவல்படை மற்றும் பிற திட்டங்கள்
இந்திய கடலோர காவல்படைக்காக அதிக திறன் கொண்ட ‘ஏர் குஷன் வாகனங்கள்’ (Hovercrafts) வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை தேடுதல், மீட்புப் பணிகள் மற்றும் கடற்கரை ரோந்துப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும். இது தவிர, சுகோய்-30 போர் விமானங்களின் எஞ்சின்களைப் புதுப்பிக்கவும் (Overhaul) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் மிக அதிகமான கொள்முதல் நடவடிக்கை
2025-26 நிதியாண்டில் மட்டும் இதுவரை 6.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 55 திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஆரம்பகட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய வரலாற்றிலேயே மிக அதிகமான கொள்முதல் நடவடிக்கையாகும். ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் அதே வேளையில், எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய அதிநவீன வெளிநாட்டு ஆயுதங்களையும் இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
