காரைக்குடி,ஜூன்.25; சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலுக்கு இடையே, சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் நடிகை த்ரிஷாவின் படத்தை வைக்கக் கோரிய விநோத சம்பவம் பெரும் பரபரப்பையும், அதே நேரத்தில் அவையில் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தலைவர்கள் பட விவகாரத்தால் சூடான மாநகராட்சி மன்றம்
காரைக்குடி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் பொறுப்பு மேயர் மற்றும் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாநகராட்சி கூட்டரங்குகளில் தற்போதைய முதலமைச்சர் விஜய் புகைப்படத்துடன், முன்னாள் முதலமைச்சர்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.
எனவே, இங்கும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை அரங்கில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த துணை மேயர் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள் இணைந்து ஸ்டாலின் படத்தை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் எனக்கூறி, இருவரது படங்களையும் வைத்தனர். இதனால் அவையில் அடுத்தடுத்து படங்கள் வைக்கப்பட்டு சற்றே சலசலப்பான சூழல் நிலவியது.
“ஆட்சி மாற்றத்திற்கு காரணமே த்ரிஷா தான்” – சுயேச்சை கவுன்சிலர்
தலைவர்களின் படங்கள் குறித்து தீவிரமான விவாதங்களும் வாக்குவாதங்களும் சென்று கொண்டிருந்த வேளையில், 11-வது வார்டு சுயேச்சை மாமன்ற உறுப்பினர் மெய்யர் என்பவர் திடீரென எழுந்து நின்று ஒரு விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தார். அவர் மாமன்ற அரங்கில், “மற்ற தலைவர்களின் படங்களுடன் நடிகை த்ரிஷாவின் படத்தையும் கண்டிப்பாக மாட்ட வேண்டும்” என்று ஆக்ரோஷமாக வாதிடத் தொடங்கினார்.
மேலும், “கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அவங்க (த்ரிஷா) தான்! த்ரிஷா படத்தை வைக்காவிட்டால் வன்முறை வரும்” என்ற அவரது விநோதமான வாதத்தைக் கேட்டு, தீவிரமான வாக்குவாத களமாக இருந்த மாமன்றமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.
மாநகராட்சி அரங்கில் எழுந்த சிரிப்பலை
அரசியல் தலைவர்கள் பட விவகாரத்தில் ஏற்கனவே சூடாக இருந்த அவையில், கவுன்சிலர் மெய்யர் நடிகை த்ரிஷாவை “வருங்கால முதலமைச்சர்” என்பது போலவும், அவரால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்றும் மழுப்பலாகக் கூறி பிடிவாதம் பிடித்தது அங்கிருந்த மற்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், த்ரிஷா படத்தை மாட்டுவதற்கு அங்கு தகுந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் கூச்சலிட்டார். சலசலப்பாக இருந்த மாமன்றக் கூட்டம், இந்த ஒரு விசித்திரமான கோரிக்கையால் சில நிமிடங்களிலேயே பெரும் சிரிப்பலையாகவும், கலகலப்பாகவும் மாறியது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாமன்றக் கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், காரைக்குடி மாநகராட்சியில் அரசியல் தலைவர்களின் புகைப்படப் போட்டிக்கு மத்தியில், சுயேச்சை கவுன்சிலர் த்ரிஷாவின் புகைப்படத்தை வைக்கக் கோரி பிடிவாதம் பிடித்த சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறி வைரலாகி வருகிறது.
