Skip to content

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் நிபந்தனையற்ற ஆதரவு; காரணம் என்ன? தலைவர்கள் விளக்கம்!

சென்னை,மே.08; தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தவெக ஆட்சிக்கான பெரும்பான்மை பலம் அதிகரித்து, புதிய அரசு அமைவது உறுதியாகி உள்ளது.

அதிக இடங்களில் வென்றபோதிலும், பெரும்பான்மை இல்லை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் இருமுறை கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.

தவெகவிற்கு சிபிஐ, சிபிஎம் நிபந்தனையற்ற ஆதரவு

இதனையடுத்து இன்று (மே 8, 2026) ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெக ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இரு கட்சிகளுமே ஆதரவுக் கடிதங்களை தவெக நிர்வாகிகளிடம் அளித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூரில் போட்டியிட்ட லதா மற்றும் பத்மநாதபுரத்தில் போட்டியிட்ட செல்லசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து மற்றும் தளியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இடதுசாரிகள் ஆதரவால் தவெகவின் பலம் 116 ஆனது

இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால் தவெகவின் ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.

தவெகவிடம் ஆதரவு கடிதங்களை அளித்த பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வீரபாண்டியன் மற்றும் பெ.சண்முகம், தவெகவிற்கு ஆதரவளிப்பதற்கான காரணங்களை விளக்கினர்.

தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு; கூட்டணி அல்ல

தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கிறோம்; மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்து இருக்கின்றார்கள்; நாங்கள் வழிமொழிந்து இருக்கின்றோம்; ஜனநாயகத்திற்கு மக்கள் ஆதரவளித்த நிலையில் தவெகவை ஆதரிப்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்;

தேர்தலில் தோல்வியடைந்த போதும் ஒன்றிய பாஜக அரசு கொல்லைப்புறம் வழியே நுழைய முயற்சிக்கிறது; இன்னொரு தேர்தலை தவிர்க்க, ஆளுநர் ஆட்சி, பாஜக வருகையை தடுக்க தவெகவை ஆதரிக்கிறோம்; மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்க முற்படும்போது திமுகவுடன் இணைந்து போராடுவோம்; தவெக அரசுக்கு மட்டுமே ஆதரவளிக்கிறோம்; அதனுடன் கூட்டணி கிடையாது என்று வீரபாண்டியனும் சண்முகமு் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *