சென்னை,மே.08; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஐந்து பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் ஆதரவை தவெக கோரி வருகிறது.
அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனை சென்னை மண்ணடியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் அருண்ராஜ், முஸ்தபா உள்ளிட்டோர் நேற்று (மே 7, வியாழன்) நேரில் சந்தித்து தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரினர்.
மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது
இதன் தொடர்ச்சியாக காதர் மொய்தீன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காதர் மொய்தீன், “தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகிகள் எம்மைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினர். ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது. அவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டோம்,” என்று தெரிவித்தார்.
“வேண்டுமானால் தவெகவினர் தன்னிடம் கேட்பதற்குப் பதிலாக மு.க.ஸ்டாலினிடமே கேட்டுக்கொள்ளலாம்” என்றும் கூறிவிட்டதாக காதர் மொய்தீன் குறிப்பிட்டார்.
தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி சாத்தியமா?
செய்தியாளர்கள் அவரிடம், “ஒருவேளை அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தெரிவித்தால் உங்கள் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது பெரிய அதிசயமாகத்தான் இருக்கும்,” எனத் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் எப்போதும் நல்ல முடிவுகளையே எடுப்பார் என்றும், அதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழுமனதுடன் ஏற்கும் என்றும் உறுதிபடக் கூறினார்.
தமிழ்நாடு அரசியலில் நாள்தோறும் ஒரு திருப்பம்
தமிழ்நாடு அரசியல் களம் நாள்தோறும் திருப்பத்தைச் சந்தித்து வருகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான அரசியல் சமன்பாடுகள் குறித்து காதர் மொய்தீன் கூறிய “அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்ற கருத்து, வரும் நாட்களில் புதிய கூட்டணி மாற்றங்களுக்கு வித்திடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியாக இருப்பதை இப்பேட்டி உறுதி செய்துள்ளது.
