Skip to content

திமுக கூட்டணியில் 7 தொகுதிகளைக் கேட்டுப்பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

சென்னை,மார்ச்.22; திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை ஒவ்வொன்றாக உறுதி செய்து வருகிறது.

அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5, மதிமுகவுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதைக் காரணம் காட்டி இடங்களைக் குறைக்க திமுக முயல்வது, கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசர செயற்குழு கூட்டம்: நிர்வாகிகளின் அதிரடி முடிவு

இதுபோன்ற சூழலில், சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று (மார்ச் 21, சனிக்கிழமை) அவசர செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி மற்றும் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், திமுக தரப்பில் முன்வைக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு, இந்த முறை 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

7 தொகுதிகள் இலக்கு; விட்டுக்கொடுக்காத மார்க்சிஸ்ட்

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “கடந்த முறை பெற்ற 6 தொகுதிகளோடு கூடுதலாக ஒரு தொகுதியைச் சேர்த்து, மொத்தம் 7 தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினர். ஒருவேளை 7 தொகுதிகள் கிடைக்காவிட்டாலும், கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளுக்குக் கீழ் கண்டிப்பாக இறங்கி வரக்கூடாது என்பதில் நிர்வாகிகள் ஒருமனதாக உள்ளனர்.

சென்னை புறநகர் தொகுதிகளில் ஆர்வம்

திமுக தரப்பு 5 தொகுதிகளில் உறுதியாக இருந்தால், சென்னையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றைக் கூடுதலாகப் பெற வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வேளச்சேரி,, பெரம்பூர், வில்லிவாக்கம், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட அவர்கள் உறுதியாக உள்ளனர்.

இதில் பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கனவே 3 முறை வெற்றி பெற்றுள்ளதால், அந்தத் தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்கக் கோரி திமுகவிடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

மா.கம்யூனிஸ்ட் கட்சியின் கௌரவத்தை கருத்தில் கொள்ள முடிவு

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில், கட்சியின் கௌரவத்தையும், கள எதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு தொகுதிகளைப் பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை நடைபெறவுள்ள இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *