Skip to content

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்: ராஜ்நாத் சிங் வாக்குறுதி!

தென்காசி, ஏப்.19: 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால், கொளுத்தும் வெயிலையும் தாண்டி பரப்புரை அனல் பறக்கிறது.

நேற்று மோடி, இன்று அமித் ஷா பரப்புரை

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நேற்று (ஏப்ரல் 19, 2026)பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19, 2026) பரப்புரையில் ஈடுபட்டார்.

புளியங்குடியில் ராஜ்நாத் சிங் சாலை வலம் வந்து பரப்புரை

இதேபோல் தேர்தல் பரப்புரைக்காக வந்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமிக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல் 19, 2026) வாக்கு சேகரித்தார்.

அவர், புளியங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து சிந்தாமணி பேருந்து நிலையம் வரை சாலை வலம் சென்றார்.

தமிழ்நாட்டை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் திமுக

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், திமுக தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது; திமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஊழல் செய்கின்றனர்; சென்னை உயர் நீதிமன்றம் இங்கு ஒரு அமைச்சரையும், அவரது மகனையும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சொல்லியுள்ளது; இன்னொரு அமைச்சரின் பெயர் சட்டவிரோத மணல் கொள்ளையில் அடிபடுகிறத; கடந்த சில ஆண்டுகளில் சட்டவிரோத மணல் கொள்ளையால் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துள்ளனர்; தமிழ்நாட்டின் வளங்களை நேரடியாக கொள்ளையடிக்கின்றனர் என சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை படுமோசம்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் மசோதாவை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தடுத்து நிறுத்தின என்று ராஜ்நாத் சிங் வசைபாடினார். தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் கடன் தொகை 10.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என அதிர்ச்சி தெரிவித்தார்.

கடன் உயர்ந்துள்ளது, மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை

மாநிலத்தின் கடன் மட்டும் உயர்ந்துள்ளது; ஆனால் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை; மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி தரவில்லை என்று பொய் செல்கின்றனர்; கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் அந்த பணம் திமுகவினரிடம் சென்றுள்ளது; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணம் திருப்பி எடுக்கப்படும்; அது மக்களின் பணம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் சிறுநீரக திருட்டு

திமுக எம்எல்ஏ ஒருவரின் மருத்துவமனையில் சிறுநீரக திருட்டு குறித்த பெரிய குற்றச்சாட்டில் விசாரணை நடக்கிறது; திமுக அரசு ஏழை மக்களின் உயிரோடு விளையாடுகிறது; இந்த திமுக ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்; கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் இறந்தனர்; இது திமுக அரசின் முழு அலட்சியத்தால் நடந்தது; சட்டவிரோதமாக சாராயம் வெளிப்படையாக விற்பனையாகிறது; இந்த அலட்சியத்துக்கும், குழப்பத்துக்கும் எதிராக குரல் கொடுத்து, மக்கள் நலனை முன்னிருத்தும் அரசை கொண்டுவர வேண்டிய நேரம் இது என்று அவர் பேசினார்.

தே.ஜ.கூ ஆட்சிக்கு வந்தவுடன் சாராய மாபியாக்களை ஒழிப்போம்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த பிரச்சினையை வேரோடு அழிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாராய மாபியாக்களை ஒழிப்போம். திமுக எப்போதும் நமது நம்பிக்கைகளை கேலி செய்துகொண்டே உள்ளது.

“தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்,” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *