சென்னை,ஜூன்.24; நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயலிர் -2 படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173ஆவது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
ரஜினிகாந்தின் புதிய படத்தின் பெயர் ‘தர்மன்’ என அறிவிப்பு
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்றழைக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
பிரபல இயக்குனர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினியின் மகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“பேசாமலிருந்தால், வாயில் என்ன கொழுக்கட்டையா? என்று கேட்பர்”
இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று (ஜூன் 24, புதன்) நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், நாம பேசாமலேயே இருந்தால், வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கின்றாயா என்று சொல்வார்கள்-பேச ஆரம்பத்தால், இப்போ பேசு எனக் கூறுவார்கள்-பேசிவிட்டால், நீ பேசாமலேயே இருந்திருக்கலாம் என்று கூறுவார்கள்-மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – நம்மை பிடிக்காதவர்களுக்கு, என்ன செய்தாலும் பிடிக்காது -நம்மை பிடிக்கும் என்பதால், நாம் எது செய்தாலும் பிடிக்கும் என நினைப்பதும் முட்டாள்தனம் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
ரஜினியின் பேச்சு யாரைக் குறிக்கிறது என விவாதம்
ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு யாரைக் குறிக்கிறது என்று சமூக வலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது. முதலமைச்சர் விஜய் வாய் திறந்து பேச மறுக்கிறார் – வாயைத் திறங்க சி.எம்.சார்…என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றனர். நேற்று (ஜூன் 23, செவ்வாய்) சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பேசினார் . அது பல்வேறு சர்ச்சையாகி, விவாதப் பொருளாகிவிட்டது.
இந்நிலையில், தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேசியது, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகவும், அவருக்கு அறிவுரை கூறுவது போன்றும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
