Skip to content

பிரதமர் மோடியை ‘பயங்கரவாதி’ எனக் கூறியதாக எழுந்த சர்ச்சை; மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி,ஏப்.23; தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாதுரையின் பெயரில் கட்சி நடத்தும் அதிமுகவினர், எப்படி மோடியுடன் சேர முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி என்கிற பதத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது கட்சி (பாஜக)சமத்துவத்தையும் நீதியையும் நம்பாது; இந்த மக்கள் (அதிமுகவினர்) அவர்களுடன் சேருகிறார்கள் என்றால், அவர்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார்கள்;

அண்ணாதுரை, காமராஜ், பெரியார், கலைஞர், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோரின் தத்துவத்தை பலவீனப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்” என்று கார்கே தெரிவித்திருந்தார். கார்கேவின் இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது.

கார்கே மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

கார்கேவின் கருத்துகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாஜக தலைவர்கள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இது நாட்டின் பிரதமரை இழிவுபடுத்தும் செயல் என்றும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்த மல்லிகார்ஜூன கார்கே

இதுகுறித்து விளக்கமளித்த கார்கே, பிரதமரை பயங்கரவாதி என்று அழைக்கவில்லை என்று மறுத்தார். “நான் பிரதமருக்கு எதிராகப் பேசவில்லை; பிரதமர் அரசியல்வாதிகளையும் வேட்பாளர்களையும் அச்சுறுத்துகிறார்; வரி பயங்கரவாதம் நடைபெறுகிறது என்று நான் கூறினேன்; அமலாக்கத்துறை சோதனைகளை நடத்துகிறது, வருமான வரித்துறை சோதனைகளை நடத்துகிறது, சிபிஐ சோதனைகளை நடத்துகிறது… இந்த பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி துணைபோகிறார். நான் அவரை பயங்கரவாதி என்று அழைக்கவில்லை… அவர் மக்களைப் பயமுறுத்துகிறார். சோதனைகள் மூலம் மக்களை அமைதியாக்க முயற்சிக்கிறார்… இதைத்தான் நான் சென்னையில் கூறினேன்,” என்று கார்கே விளக்கமளித்தார்.

கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தற்போது கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு கட்சியின் தேசியத் தலைவர் மற்றொரு தலைவரை விமர்சிக்கும் போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள நோட்டீஸில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன:

மல்லிகார்ஜுன கார்கே தனது கருத்துக்கு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை (Model Code of Conduct) மீறியதாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இன்றைக்குள் (ஏப்ரல் 23, 2026) பதில் அளிக்காவிட்டால், ஆணையம் தன்னிச்சையான நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்; காங்கிரஸ் எதிர்வினை

இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ், “கார்கேவின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அவர் நாட்டின் ஜனநாயகத்தைச் சிதைக்கும் போக்கையே விமர்சித்தார்” என்று விளக்கமளித்துள்ளது. மறுபுறம், “காங்கிரஸ் கட்சி விரக்தியின் விளிம்பில் இருப்பதால் இத்தகைய தரக்குறைவான விமர்சனங்களை முன்வைக்கிறது” என்று பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

என்ன விளக்கமளிக்கப் போகிறார் கார்கே?

தேர்தல் நேரங்களில் அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமான விமர்சனங்கள் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும், ஆனால் தனிநபர் தாக்குதல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமான கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே அளிக்கப்போகும் விளக்கம் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *