ஐதராபாத்,மே.17; போக்சோ வழக்கில் மகன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான செய்திகளில், அவரது தந்தையான மத்திய இணை அமைச்சரின் படங்களை பயன்படுத்த ஐதராபாத் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் (Bandi Sanjay Kumar) மகன் பண்டி சாய் பகீரத் (Bandi Sai Bageerath) போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை; மத்திய இணை அமைச்சரின் மகன் கைது
17 வயது சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்து பாலியல் வன்கொடுமையாக பண்டி சாய் பகீரத் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பண்டி சாய் பகீரத் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து தனக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கக் கோரி பண்டி சாய் பகீரத் தரப்பில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து, சாய் பகீரத் போலீசாரிடம் சரணடைந்ததாக ஒரு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், சைபராபாத் காவல்துறை ஆணையர் ஊடகங்களிடம் பேசியபோது, சாய் பகீரத் ஐதராபாத் நகரின் வெளிவட்டப் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகன் கைது செய்திகளில் தந்தையின் படத்தை காட்ட எதிர்ப்பு
இந்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியபோது, சாய் பகீரத்தின் படத்தை மட்டும் காட்டுவதற்குப் பதிலாக, அவரும் அவரது தந்தை பண்டி சஞ்சய் குமாரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை முதன்மைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டன.
இதனையடுத்து தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதாகக் கூறி, 19 ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள தளங்களுக்கு எதிராக பண்டி சஞ்சய் குமார் ஐதராபாத் நகர் சிவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
மத்திய இணை அமைச்சரின் படங்களை பயன்படுத்த இடைக்கால தடை
இந்த வழக்கை விசாரித்த கோடைகால விடுமுறைக்கால நீதிபதி, அமைச்சருக்கு சாதகமாக இடைக்காலத் தடை உத்தரவை (Ad-interim injunction) பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “மனுதாரரின் புகைப்படங்களை எந்தவொரு வகையிலும் சித்தரிக்கும் வகையில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சமூக ஊடக மற்றும் ஊடக தளங்களில் உள்ள பதிவுகளையும் உடனடியாக நீக்க வேண்டும்”.
இடைக்கால தடை; மத்திய இணை அமைச்சருக்கு நிவாரணம்
இவ்வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரு பொது விவகாரத்தில் குற்றச்சாட்டிற்கு உள்ளான நபரின் உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக, நாட்டின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு அமைச்சரின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்துவது அவரது தனிப்பட்ட நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த இடைக்கால உத்தரவு சுட்டிக்காட்டுகிறது. அதே வேளையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் இந்த போக்ஸோ வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
