சென்னை,மே.30; தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக உள்ள மதுக்கடைகளை இரு வாரங்களில் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கடந்த 12ஆம் தேதி ஆணையிட்டிருந்தார்.
717 மதுக்கடைகளை மூட ஆணையிட்டிருந்தார், முதல்வர் விஜய்
பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளை மூடும்படி ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்படவில்லை: அன்புமணி
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் விஜய் ஆணையிட்ட மதுபானக் கடைகளில் பெரும்பாலானவை மூடப்படவில்லை என்று செய்திகள் வெளியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவற்றில் பெரும்பாலான கடைகள் மூடப்படவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், இந்த விசயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றமளிக்கின்றன என்று கூறியுள்ளார்.
மதுக்கடைகள் மூடும் விசயத்தில் அதிகாரிகள் தயக்கமா?
ஆனால், மதுக்கடைகளை மூடும் விசயத்தில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதை சுட்டிக்காட்டி தான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டதை அன்புமணி நினைவுகூர்ந்துள்ளார்.
இதனையடுத்து மே23ஆம் தேதி வரை 436 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள கடைகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் மூடப்பட்டு விடும் என்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்திருந்ததாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள மதுக்கடைகளை இன்றைக்குள் மூட வலியுறுத்தல்
முதலமைச்சர் விஜய் அளித்த இரு வாரக் காலக்கெடு மே 26ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது – நேற்றுடன் 16 நாள்கள் முடிவடைந்துவிட்டன – ஆனால், 717 கடைகளும் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை – பல இடங்களில் மதுக்கடைகள் மூடப்படாமல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வருகின்றன – இதை அனுமதிக்க முடியாது என்று அன்புமணி கூறியிருக்கிறார்.
எனவே, இதுவரை மூடப்படாத மதுக்கடைகளை இன்றைக்குள் மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அன்புமணி தனது அறிக்கை வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.
